வெளிநாட்டில் இருந்து வந்து தாயை தேடிய தமிழர்! முடிவுக்கு வந்த 40 ஆண்டு பாசப்போராட்டம்.. நெகிழ்ச்சி புகைப்படம்

டென்மார்க்கை சேர்ந்த இளைஞர் தனது தாயை தமிழ்நாட்டில் தேடி வந்த நிலையில் தற்போது அவர்களின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியான முடிவை எட்டியுள்ளது.

தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த கலியமூர்த்தி – தனலட்சுமி தம்பதி வறுமை காரணமாக சென்னைக்கு 1979ஆம் ஆண்டு குடிபெயர்ந்த நிலையில் தங்களின் மகனை தத்து கொடுத்தார்கள்.

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்கில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.

தற்போது வங்கி அதிகாரியாக உள்ள சாந்தகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை பெற்ற தாய் மற்றும் குடும்பத்தாரை காண அவருக்கு ஆசை ஏற்பட்ட நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து உறவுகளை தேடினார்.

ஆனால் அவர்கள் கிடைக்காததால் டென்மார்குக்கு திரும்பின்னர்.

பின்னர் ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்களில் சாந்தகுமார் தனது தாய் மற்றும் குடும்பத்தாரை தேடி தமிழக தெருக்களில் அலைந்தார்.

கூடவே, அவருக்கு மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து தன்னார்வு தொண்டு நிறுவனம் உதவி கிடைக்கவே, அந்த நிறுவனத்தின் இயக்குநர் அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோருடன் சேர்ந்து தேடுதலைத் தொடங்கினார்.

அப்போது ஒரு சமயம் அம்மா உங்களை தேடி உங்கள் மகன் வந்திருக்கிறேன், எங்கு இருக்கிறாய் அம்மா என தனக்கு தெரிந்த தமிழில் பேசிக் கொண்டே தேடினார்,

மேலும் பார்ப்போரிடம் எல்லாம் அவங்க கிடைத்ததும் அவங்கள மகாராணி போல் வைத்து பார்த்து கொள்ள வேண்டும் என்று கலங்கினார்.

இந்நிலையில் நீதிமன்றம் மூலம் தனது ஆவணங்களை பெற்ற சாந்தகுமார் தனது அண்ணன் ராஜன் என்பவரும் டென்மார்க்கில் தத்துக் கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.

தனது அண்ணனை டென்மார்க்கில் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார் சாந்தகுமார். இதேபோல், தஞ்சையில்பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி குறித்த அவரது குடும்பத்தார் குறித்து தகவல் தெரியவில்லை.

இந்தசூழலில் தான் தனது தாய் சென்னைக்கு குடிபெயர்ந்தது அவருக்கு தெரிந்தது.

பின்னர் டென்மார்குக்கு சென்ற அவருக்கு தாய் தனலட்சுமி சென்னையை அடுத்த மணலியில் இளைய மகன் சரவணனிடம் இருப்பது தெரியவந்தது.

அதை அடுத்து சாந்தகுமார் மற்றும் அவரது குழந்தைகள் சென்னையில் இருக்கும் தனலட்சுமியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். சில வருடங்களாகத் தாயைத் தேடி தமிழகம் வந்த சாந்தகுமார் தான் கற்றுக்கொண்ட சிறு சிறு தமிழ் வார்த்தைகளில் தாய் உடல்நலம் விசாரிக்க தாய் தனலட்சுமி கண் கலங்கினார்.

வரும் நவம்பர் மாதம் தாயைச் சந்திக்க டேவிட் சாந்தகுமார் டென்மார்க்கிலிருந்து தமிழகம் வருவதாகக் கூறியுள்ளாராம்.

இது குறித்து சாந்தகுமாருக்கு உதவிய வழக்கறிஞர் கூறுகையில், டென்மார்கைச் சேர்ந்த தம்பதிக்குத் தனது குழந்தையை தனலட்சுமி தத்து கொடுத்த சில வருடங்களில் அவரின் கணவர் கலியபெருமாள் இறந்துவிட்டார்.

அடுத்தடுத்த நெருக்கடிகளில் நொடிந்து போன தனலட்சுமி சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து அவரின் இளைய மகன் உள்ளிட்ட பிள்ளைகளை வளர்த்துள்ளார்.

சாந்தகுமாருக்குத் தாயிருக்கும் இடம் தெரிந்ததும் அவர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சரி பார்த்தோம்.

தனலட்சுமி சாந்தகுமார் மற்றும் ராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்களை இதுநாள் வரை பத்திரமாக வைத்திருந்தார். அதன்மூலம் தனலட்சுமி தான் சாந்தகுமாரின் தாய் என்பதை உறுதி செய்தோம் என கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*