மழை வருமா ! பயிர் வளம் பெருமா ? வங்கக்கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு கனமழை என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டுக்கு அதிக மழையைக் கொடுக்கும் வட கிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அரபிக் கடலில் உருவான கியா, மகா புயல்கள் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிக பலன் அடையவில்லை .


மகா புயல், குஜராத் நோக்கி நகர்ந்துவிட்டது.இந்தச் சூழலில் வங்கக் கடலில் அந்தமான் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகர்வதைப் பொறுத்தே, அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கிழக்கில் இருந்து வீசிய கடல் காற்று காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல் உள்பட பல பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருகிறது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.