அயோத்தி சர்ச்சைக்குரிய நிலவிவகாரம் நவம்பர் 13 தீர்ப்பு! அதுவரை காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு!….

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் மூன்று தரப்பினரும் நிலத்தை சமமாக பங்கிட்டு கொள்ள, கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 வழக்குகள் தொடரப்பட்டன.இதற்கு தீர்வு காணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதிலும் தீர்வு காணப்படாததால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு விசாரித்து வந்தது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 16ஆம் தேதியன்று முடிக்கப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்னதாகவோ இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அயோத்தி வழக்‍கில் வருகிற 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னெசரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் வருகிற டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி, வாரணாசி, மதுரா நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்நிலையில், வருகிற 10ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.