நாடு முழுவதும் குறைவான சம்பளத்தில் அதிகரிக்கவிருக்கும் வேலை நேரம் ! மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது…

நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 9மணி நேரமாக அதிகரிக்க மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தொழிலாளர் ஊதிய விதிமுறை வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், இந்த சூழலில் தொழிலாளர்களுக்கான ஊதிய விதிமுறை குறித்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரம் தற்போது 8 மணி நேரமாக உள்ள நிலையில் அதனை 9மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் நாடு முழுவதும் ஒரே குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது அல்லது குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரிப்பது குறித்து எந்த தகவலும் அந்த அறிக்கையில் இல்லை. அதேநேரம் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மக்கள் தொகையை கணக்கில் கொண்டு 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி மாநகரமாகவும், 10 முதல் 40 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதி நகர்பகுதியாகவும், மற்றவை கிராமப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், மின்சாரம், பிறசெலவுகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 20 சதவீதமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான படிப்பு, மருத்துவ செலவுகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 சதவீதமாக இருக்க வேண்டும். வீட்டு வாடகை 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை குறித்து டிசம்பர் 1ம் தேதிக்குள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.