திருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்: கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன? அதிர்ச்சி தகவல் ……..

திருச்சி கே.சாத்தனூர் பகுதியில் உள்ளது அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இஸ்லாமிய சிறுபான்மை கல்வி நிறுவணம். தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.அந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மாணவி ஸாஃப்ரா பர்வீன், கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு பி.எஸ்சி நியூட்ரிஷன் & டையட்டிக்ஸ் படித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை எண் 100-ல் தூக்கில் சடலமாக தொங்கினார். அதைப் பார்த்துப் பதறிய சகமாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் கொடுத்த தகவலையடுத்து, விரைந்துவந்த கே.கே.நகர் போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸாரிடம் கல்லூரி நிர்வாகம், “தற்கொலை செய்துகொண்ட மாணவி பள்ளிக்கல்வி வரை இந்தியில் படித்தார். தற்போது கல்லூரிப் பாடங்கள் ஆங்கில வழியில் நடத்துவதால், அவர் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டார். அதன்காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறியது.ஆனால், மாணவியின் மரணத்துக்கான காரணமே வேறு என்றும், மொபைல் போன் பயன்படுத்தியதால் விடுதி காப்பாளர் உளவியல் ரீதியாக அவரை டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்றும், திடுக்கிடும் தகவல்கள் கல்லூரி மாணவர்களிடையே வலம் வருகிறது.

“காலை 6.30 மணியளவில் ஸாஃப்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் 10.30 மணிக்குத்தான் போலீஸாருக்கே தகவல் தந்தார்கள். அதற்குள் மரணத்துக்கான காரணங்களை மாற்றியதுடன், அவருடன் அறையில் தங்கியிருந்த மாணவியை அவர்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றனர்” என்றும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.