குரு பெயர்ச்சியை ஏன் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? குரு பொன்னவன். திருமண யோகத்தையும், புத்திர பாக்கியத்தையும் தருபவர், பண வருமானத்தை கொடுப்பவர்.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தனுசு ராசியில் கேது உடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிசாரமாக மகரம் ராசிக்கு பயணித்து மீண்டும் வக்ர கதியில் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார்.

செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தனுசு ராசியில் இருந்து நேர் கதியில் பயணம் செய்கிறார். மூன்று மாதங்களில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் தனுசு ராசியில் இருந்து நேர்கதியில் பயணமாகி மகரம் ராசிக்கு செல்கிறார்.

இந்த குருவின் சஞ்சாரம், பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகளை கொடுக்கப் போகிறது. சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கொடுக்கும். மேஷம் முதல் கடகம் வரை நான்கு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மகரம் ராசியில் ஐப்பசி 30ஆம் தேதி அதாவது நவம்பர் மாதம் 15ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி அதாவது நவம்பர் 20ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது.

மகரம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இங்கிருந்து குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது.

நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுமே நல்ல பலன்களை அடையப்போகிறார்கள். முதல் ஆறுமாதங்களுக்கு சிலருக்கு பாதகமாக இருந்தாலும் அடுத்த ஆறுமாதங்கள் குரு கும்பம் ராசிக்கு பயணிக்கும் போது நிறைய நன்மைகளை கொடுப்பார்.

மேஷம்:
குருவின் சஞ்சாரம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறது. பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். பிசினஸ், தொழில், வியாபாரத்தில் மாற்றம் வரும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். உத்யோக உயர்வை தரும்.

குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. உங்க குடும்பம் குதூகலமாகும். பிரச்சினைகள் நிவர்த்தியாகும். பணப்பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். நான்காம் வீட்டில் குரு பார்வை விழுவதால் நிச்சயம் இடம் மாற்றம் ஏற்படும், சுகமும் சந்தோஷமும் ஏற்படும், வேலையில் இடமாற்றம், சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது.

ஆறாம் வீட்டில் குருவின் பார்வை விழுகிறது. கடன் பிரச்சினை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். குருபகவான் ஏப்ரல் மாதம் கும்பம் ராசியில் பயணம் செய்வார். ஏப்ரல் முதல் குரு அதிசாரமாக குரு கும்பம் ராசியில் பயணம் செய்யும் காலம் சுபமான காலம் வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

திருமணம் முடிந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகள் நீங்கும். மேஷத்திற்கு குரு பத்தாம் இடத்திலும் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இது சுபமான குரு பெயர்ச்சி.

ரிஷபம்:
ரிஷபம் ராசிக்கு அஷ்டம குருவாக இருந்து இனி பாக்ய ஸ்தான குருவாக ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். இதுநாள்வரை பண கஷ்டம் மனக்கஷ்டம் இருந்தது. இனி இந்த குரு பெயர்ச்சியால் பிரச்சினைகள் நீங்கும். வீண் பண விரையங்கள் இனி வராது. தடை தாமதங்கள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினை நீங்கும்.

மகரம் ராசியில் இருந்து குருவின் பார்வை ரிஷபம் ராசிக்கு விழுகிறது. ஒன்பதாம் வீட்டில் குரு சனி இணைவு. நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் வசந்தம் வீசும். கவலை கஷ்டங்கள் நீங்கும். சொந்த வீடு வாசல் வாங்கலாம். தடைபட்ட காரியம் தடையின்றி நிறைவேறும்.

குரு சுப கிரகமாக இருந்தாலும் ரிஷபம் ராசிக்கு அதிகம் நன்மை செய்ய மாட்டார் என்றாலும் குருவின் பார்வையால் மனஅழுத்தங்கள் நீங்கும் உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரிகளுக்கு நல்லது நடக்கும். திருமணம் சுப காரியம் நடக்கும்.

திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி நிறைய பாக்கியங்களை கொடுக்கும். அவப்பெயர்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை நீக்கும். ஐந்தில் குரு பார்வை விழுவதால் திருமணம் நடைபெறும்.

ரிஷபம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி நிறைய நன்மைகளை செய்வார். 2021ல் குரு ஏப்ரல் மாதம் கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைவார் ஆகஸ்ட் வரை பயணம் செய்வார். இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும் ஏற்படும். சுபமான பலனை கொடுக்கும்.

மிதுனம்:
ஏழு பத்துக்கு அதிபதி குரு பகவான் அஷ்ட ஸ்தானத்திற்கு செல்கிறார். கஷ்டங்கள், சிக்கல்கள் நிறைந்த இடம் எட்டு. குரு எட்டில் பயணம் செய்வதால் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும்.

குரு பார்வை உங்க ராசிக்கு 12ஆம் வீடு, இரண்டாம் வீடு, நான்காம் வீடுகளின் மீது விழுகிறது. ரொம்ப விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். எந்த காரியம் செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

ஐந்து மாதத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்வது நன்மை நடைபெறும். நெருக்கடிகள் நீங்கும். காரணம் குரு எட்டாம் வீட்டில் இருந்து அதிசாரமாக ஆறு மாதங்கள் கும்பம் ராசியில் பயணிப்பார்.

அது பாக்ய ஸ்தானம் ஒன்பதாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை 2021 ஏப்ரல் மாதம் முதல் உங்க ராசியின் மீது விழுகிறது. மன அமைதி கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம்:
கடகம் ராசிக்கு குருபகவான் இதுநாள் வரை ஆறாம் வீட்டில் இருந்தார். குரு ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகி உங்க ராசியை பார்வையிடுகிறார். சிறப்பான கால கட்டம். சனி அஷ்டமத்தில் இருந்தாலும் குரு பார்வை சஞ்சாரத்தினால் நிறைய நன்மைகள் நடைபெறும்.

பண மழை பொழியப்போகிறது. இழந்த விசயங்களை நீங்கள் பெறும் காலம் வந்து விட்டது. நல்ல செய்திகள் தேடி வரும். மகரம் ராசிக்கு செல்லும் குருவின் பார்வை நேராக உங்க ராசிக்கு விழுகிறது. ராகு 11ஆம் வீடு ரிஷபத்தில் உள்ள ராகுவை குரு பார்க்கிறார். வருமானம் அதிகரிக்கும்.

குருவின் பார்வை மூன்றாம் வீட்டில் விழுவதால் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குரு உங்க ராசிக்கு ஆறு ஒன்பதுக்கு அதிபதி என்பதால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் குரு உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு செல்வார் என்றாலும் குரு பார்வையால் உங்களுக்கு நன்மையே நடக்கும்.

திருமணயோகம் வரும். உயர்கல்வி யோகத்தை குரு பகவான் கொடுப்பார். குரு பார்வையால் நோய்கள் நீங்கும். சில நேரங்களில் குரு பொருளாதார ரீதியான சிக்கல்களை கொடுப்பார்.

சிலருக்கு விரைய செலவுகள் வரலாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.