LATEST NEWS
யாருப்பா இந்த ‘நான் பார்ப்’..? 84 வயதில் 2,000 கி.மீ பயணம்..! ஏழை மக்களின் மானம் காக்கும் ‘சூப்பர் பாட்டி’..!!
தானமாகப் பெறப்பட்ட துணிகளை விநியோகிப்பதற்காக நாம் ஒரு நகரத்திற்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல யோசிப்போம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 84 வயதான பார்பரா கரோல் என்ற பெண்மணி, தன் வயதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாதமும் சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை காரை ஓட்டிச் சென்று தொலைதூர கிராமப்புற மக்களுக்குத் துணிகளை வழங்கி வருகிறார். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டோனிப்ரூக் நகரில் இருக்கும் தனது அறக்கட்டளைக் கடையிலிருந்து தானமாகப் பெறப்படும் பொருட்களைச் சேகரித்து, அவர் இந்த நற்பணியைச் செய்து வருகிறார்.
மக்கள் இவரை அன்போடு ‘நான் பார்ப்’ (Nan Barb – பாட்டி பார்ப்) என்று அழைக்கிறார்கள். தான் வளர்ந்த பகுதியிலேயே துணிகளை விநியோகிப்பதால், இவருக்குப் பாதைகள் அனைத்தும் நன்கு அலைக்கற்றதாக இருக்கின்றன. பல பயணங்களில் இவருடைய பேத்தி தாராவும் இவருடன் இணைந்து செல்கிறார். தொலைதூரப் பகுதிகளில் உள்ள கரடுமுரடான பாதைகளில் பயணிப்பது சிரமமானது என்பதோடு, சில நேரங்களில் வாகனம் பழுதாகி உதவிக்காகக் காத்திருக்க நேரிட்டாலும், பார்பரா இந்தப் பயணங்களை மிகவும் மகிழ்ச்சியோடு அனுபவித்து மேற்கொள்கிறார்.
தற்போது அவர் பயன்படுத்தி வரும் சிறிய காரில் அதிகப் பொருட்களை எடுத்துச் செல்லவோ அல்லது வேறு நபர்கள் அமர்ந்து செல்லவோ போதிய இடமில்லாமல் உள்ளது. இதனால் பார்பராவின் தொண்டு உள்ளத்தைப் பாராட்டும் உள்ளூர் மக்கள், அவர் சிரமமின்றிப் பயணிக்க ஒரு பெரிய டிரக் வாங்கித் தருவதற்காகப் பணம் திரட்டி வருகின்றனர். பயன்படாமல் இருக்கும் ஒரு பொருள், தேவைப்படும் மற்றொரு நபரைச் சென்றடையும் போது உருவாகும் மனிதப் பிணைப்பே தன்னுடைய இந்தச் சேவைக்கு முக்கியக் காரணம் என்று பார்பரா கேரல் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
