CRIME
பயங்கர ஷாக்..! அரசியல்வாதிகள் – போதைப்பொருள் கும்பல் தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சுட்டுக் கொலை… கோஸ்டாரிகாவை உலுக்கிய படுகொலை..!!
கோஸ்டாரிகா நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் கமிலோ ரோட்ரிக்ஸ் (51) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் சான் ஜோஸ் நகருக்கு வடக்கே உள்ள ஹெரதியா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த இருபது ஆண்டுகளில் அந்நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். சமூக ஊடகங்களில் பிரபலங்கள், நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் முறைகேடுகள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த கமிலோவுக்கு, போதைப்பொருள் கும்பல்களிடமிருந்து ஏற்கெனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக, அந்நாட்டு அதிபர் லாரா பெர்னாண்டஸின் வீட்டைக் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நிறுவனம் கட்டியதாக இவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் படுகொலைக்கு அதிபர் லாரா பெர்னாண்டஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முன்னதாக கமிலோவின் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக சமூகத்தில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தகவல்களை வெளியிடுவோரை அமைதிப்படுத்துவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கார்லோ டையஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
