CRIME
காலி பாட்டிலுக்கு ரூ.10 இல்லை.. ரூ.8 தான்..! கேள்வி கேட்ட நபரின் மண்டையை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்..! செங்கத்தில் அரங்கேறிய பரபரப்பு..!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியுள்ளார். தொடர்ந்து, காலி பாட்டில்களைக் கடையில் திருப்பி ஒப்படைத்து அதற்கான தொகையைப் பெறச் சென்றுள்ளார்.
அப்போது, காலி பாட்டிலுக்கு ரூ.10 வீதம் திரும்ப வழங்க வேண்டிய நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.8 மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. உரிய தொகையை வழங்கக் கோரி கோவிந்தராஜ் கேள்வி எழுப்பியதால், அவருக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் கோவிந்தராஜை பீர் பாட்டிலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
