CRIME
பகீர்..! வேற சாதி பையன காதலிச்சதால் கொடூரம்… சொந்த மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்..! உல்ஹாஸ்நகரை உறைய வைக்கும் ஆணவக் கொலை..!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆணவக் கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை நேசித்ததால் ஆத்திரமடைந்த தாய், தனது சொந்த மகளையே துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையில் ஈடுபட்ட தாயைக் கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் ஆஷா கருட் (Asha Garud) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், ஆஷா அந்த உறவுக்குத் தொடர்ச்சியாகக் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் வீட்டிற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தாய் மற்றும் மகளுக்கு இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாய், ஆத்திரத்தில் துப்பட்டாவால் மகளின் கழுத்தை நெரித்ததில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்தவுடன் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துத் தகவலறிந்த உடனே உல்ஹாஸ்நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துத் தெரிவித்துள்ள மூத்த காவல் ஆய்வாளர் சந்தோஷ் அவ்ஹாத், இது முதற்கட்ட விசாரணையில் ஆணவக் கொலை எனத் தெரியவந்துள்ளதாகவும், அனைத்துக் கோணங்களிலும் தடயங்களைச் சேகரித்துத் தீவிர விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
