CRIME
“இவன் மீது கஞ்சா பொட்டலத்தை வைத்துப் பொய் வழக்குப் போடுங்கள்..!” ஹோட்டல் அறையில் காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ் அதிகாரி.. சமூக வலைத்தளங்களில் குவியும் கண்டனங்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் மிஸ்ரா என்பவர், தனது காவலர்கள் 6 முதல் 7 பேருடன் இணைந்து ஒரு தனியார் விடுதியில் சோதனை நடத்தியபோது, அங்கு தங்கியிருந்த இளம் காதல் ஜோடியைப் பிடித்து மிரட்டியுள்ளதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சோதனையின் போது அந்த இளைஞரின் எதிர்காலத்தையே சீரழிக்கும் விதமாக, “இவன் மீது கஞ்சா பொட்டலத்தை வைத்துப் பொய் வழக்குப் போடுங்கள், அப்போதுதான் இவனுக்கு எந்த வேலையும் கிடைக்காது, வாழ்க்கையே நாசமாகிவிடும்” எனத் தனது சக காவலர்களுக்கு அந்த அதிகாரி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரியின் இந்த அச்சுறுத்தலால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், “சார், நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்” என்று கதறி அழுதபடி கெஞ்சியுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் கண்ணீருக்கும் வேண்டுகோளுக்கும் சற்றும் செவிசாய்க்காமல் அந்த அதிகாரி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் இதுபோன்ற அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் இருக்கும் வரை குற்றங்களைத் தடுக்க முடியாது என்றும், மத்தியப் பிரதேச முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு தீபக் மிஸ்ராவை நிரந்தரமாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
