CINEMA
“எதுவும் தெரியாது” விஐய்யின் அரசியல் வருகை குறித்து ஒரே வார்த்தையில் பதிலளித்த நடிகர் மம்முட்டி..!!
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விவாதங்கள் மற்றும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பல திரையுலகப் பிரபலங்கள் விஜய்க்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, விஜய்யின் அரசியல் நகர்வுகள் தென்னிந்தியத் திரையுலகம் முழுவதும் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி சென்னை விமான நிலையம் வந்தபோது, செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த மம்மூட்டி, “எதுவும் தெரியாது” என மிகச் சுருக்கமாக ஒரே வார்த்தையில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
மம்மூட்டியின் இந்தச் சுருக்கமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர் அரசியல் ரீதியான சர்ச்சைகளில் சிக்க விரும்பாமல் தவிர்த்தாரா அல்லது விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் குறித்துத் தெரியாது என மேலோட்டமாகக் கூறினாரா என்று நெட்டிசன்கள் பலவாறாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மம்மூட்டியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
