LATEST NEWS
“சார் எங்களுக்கு காலாண்டு லீவு பத்தல…! கலெக்டரையே வாய்விட்டுச் சிரிக்க வைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலாண்டு விடுமுறை போதுமானதாக இல்லை என மாணவர்கள் கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சிரிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் நெல் கொள்முதல் மையத்தை கோவை கலெக்டர் பவன்குமார் திறப்பதற்காகச் சென்றிருந்தபோது, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த கோட்டூர் அரசுப் பள்ளி மாணவர்கள் கலெக்டரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து காருக்குச் சென்ற கலெக்டர், மாணவர்கள் காத்திருப்பதைப் பார்த்து அவர்களிடம் சென்று என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு அம்மாணவர்கள், தங்களுக்குக் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாட விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர், பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, “இப்போது உங்களுக்குக் காலாண்டு விடுமுறைதானே?” என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள், “ஆமா சார். காலாண்டு லீவு பத்த மாட்டேங்குது சார்” என்று மிகவும் வெகுளித்தனமாகப் பதிலளித்தனர். மாணவர்களின் இந்த வெள்ளந்தியான பதிலைக் கேட்டு, அங்கு நின்றிருந்த மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை உயர் அதிகாரிகளும் வாய்விட்டுச் சிரித்தனர்.
https://www.instagram.com/reel/Dd80iZ1k2cY/?utm_source=ig_web_button_share_sheet
இதனைத் தொடர்ந்து கலெக்டர் பவன்குமார், தான் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கு வரும்போது மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதைக் கேட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் தலையசைக்க, ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தற்போது கலெக்டரும் மாணவர்களும் உரையாடும் இந்த வீடியோ கோவை மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.
