LATEST NEWS
“டேய் கேம் விளையாடாதடா!”னு அடிச்ச அம்மா… இன்னைக்கு உலகமே வியக்கும் கேமிங் குயின்..! 5 லட்சத்துக்கும் மேல ஃபாலோயர்ஸை வைத்து 60 வயதில் கெத்து காட்டும் ஜுவான் அத்தை..!!
சீனாவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், ஒரு காலத்தில் தான் தீவிரமாக எதிர்த்த வீடியோ கேமிங் துறையிலேயே நுழைந்து இணையத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். குவாங்டாங் மாகாணத்தின் மேஜௌ பகுதியைச் சேர்ந்த ஜோங் ஜூவான்ஜுவான், இணைய உலகில் “ஜுவான் அத்தை” என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். ஆரம்பப் பள்ளி வரை மட்டுமே படித்த இவர், விற்பனை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்ற பகுதிநேர வேலைகளைச் செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இளைய மகன் சோடே பள்ளிப் பருவத்தில் படிப்பை விட்டுவிட்டு இணைய மையங்களில் கேம் விளையாடியபோது, கோபமடைந்த ஜோங் அவரை வீட்டிற்கு இழுத்து வருவது வழக்கம். ஆனால், 2020-இல் வேலையை விட்ட அவரது மகன் மீண்டும் வீட்டிலேயே கேம் விளையாடத் தொடங்கியபோது, கோபப்படாமல் கேமிங் மீது அவருக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பிய ஜோங், தனக்கும் அதைக் கற்றுத் தருமாறு மகனிடம் கேட்டுள்ளார்.
ஆரம்பத்தில் கணினி விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வது ஜோங்கிற்கு மிகக் கடினமாக இருந்தது. பார்வையிலும், விரைவாகச் செயல்படும் திறனிலும் குறைபாடுகள் இருந்ததால், கேமிற்குள் சுவர்களில் மோதுவது, தவறான திசையில் செல்வது, படிக்கட்டுகளில் ஏற முடியாமல் திணறுவது எனப் பல தடங்கல்களை எதிர்கொண்டார். இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி பெற்றார். 2022-இல் விளையாடுவதை இணையத்தில் நேரலை செய்யத் தொடங்கினார். கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி துப்பாக்கிச் சூடு கேம்களை தன்னம்பிக்கையுடனும், இளைஞர்கள் பயன்படுத்தும் கேமிங் வார்த்தைகளுடனும் விளையாடுவதைக் கண்ட பார்வையாளர்கள் வியப்படைந்தனர். தற்போது இவர் தினமும் இரண்டு முறை நேரலை செய்கிறார், ஒவ்வொரு நேரலையையும் சுமார் 10,000 பேர் பார்க்கின்றனர்.
இதுவரை 8,000 மணி நேரத்திற்கும் மேலாக கேம் விளையாடியுள்ள ஜோங்கிற்கு தற்போது 5.27 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்கள் உள்ளனர். இவரது கேமிங் பயணத்தில் மிகவும் மறக்க முடியாத நிகழ்வாக டிசம்பர் 2024-இல் நடைபெற்ற ‘கவுண்டர்-ஸ்ட்ரைக்’ இணையப் போட்டி அமைந்தது. இதில் பிரபல 17 வயது ரஷ்ய கேமிங் வீரரான ‘டான்க்’ என்பவரை ஜோங் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மகன் விளையாடிய கேமிங்கைப் புரிந்து கொள்ள முயன்ற ஒரு தாய், இன்று உலகளவில் பிரபலமான கேமிங் நட்சத்திரமாக மாறியுள்ளது இணையவாசிகளிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
