CRIME
“அய்யோ ஒடுங்க ஒடுங்க.. நடுராத்திரியில் சூழ்ந்த மரண பயம்..” அடுத்தடுத்து பற்றி எரிந்த வீடுகள்… அலறியடித்து ஓடிய மக்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தின் ஜுப்பல் பகுதியில் உள்ள தார் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. நள்ளிரவில் திடீரென பரவிய இந்த கோரத் தீ, அடுத்தடுத்து இருந்த வீடுகளையும் மிக வேகமாகச் சூழ்ந்ததால் கிராம மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுக்கவும், அதைக் கட்டுப்படுத்தவும் பல மணி நேரம் கடுமையாகப் போராடினர்.
இந்தக் கொடூரத் தீ விபத்தில் வீடுகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் ஒட்டுமொத்த சொத்து சேத மதிப்புகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சம்பவ இடத்திற்குச் சென்ற நிர்வாகக் குழுவினர் முதற்கட்ட துயர்துடைப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20,000 ரூபாய் உடனடி நிவாரண நிதியை வழங்கியுள்ளனர். மேலும், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட உதவிகளைச் செய்வதற்கான பணிகளையும் மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
