LATEST NEWS
அடக்கடவுளே..! நம்ம சமைக்கிற எண்ணெய்யா இது..? கடுகு எண்ணெய் டேங்கில் ஜாலியாக குளிக்கும் நபர்… வைரல் வீடியோவை பார்த்து அலறும் நுகர்வோர்கள்..!!
சமூக ஊடகங்களில் உணவுப் பொருட்களின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது உண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சமையலுக்குப் பயன்படும் கடுகு எண்ணெயின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகு எண்ணெய் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் ஒரு பெரிய டேங்கிற்குள் இளைஞர் ஒருவர் இறங்கி குளிக்கும் காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
வைரலாகும் இந்த வீடியோவில், தொழிற்பேட்டை போன்ற சூழலில் உள்ள மிகப்பெரிய கடுகு எண்ணெய் சேமிப்பு டேங்கிற்குள் ஒரு இளைஞர் இறங்கி நிற்கிறார். அவர் வெறும் நிலையில் நிற்பதோடு நின்றுவிடாமல், அந்த எண்ணெயில் முங்கி எழும்பி, தனது தலைமுடியை அலசி, உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்து முழுமையாகக் குளிக்கிறார். சுற்றி இரும்பு கம்பிகளும் தரை முழுவதும் சிந்திய எண்ணெயும் காணப்பட, மற்றொரு நபர் டேங்கின் அருகே நின்று கொண்டிருக்கிறார். மக்கள் உணவாகப் பயன்படுத்தும் எண்ணெயிலேயே அந்த இளைஞர் குளிப்பது போன்ற இக்காட்சி பார்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்துப் பலரும் கடுமையான கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். சந்தையில் இருந்து நாம் வாங்கும் கடுகு எண்ணெய் எந்த அளவுக்குச் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது என்ற அச்சம் நுகர்வோரிடையே ஏற்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “கடைசியாக நாம் வாங்கும் பொருட்கள் நமது சுகாதார தரநிலைகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய அலட்சியப்போக்கு கண்டிக்கத்தக்கது” எனத் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
