LATEST NEWS
“அடுத்த விக்கெட் ஜனனி..?” பி.டி அரசகுமார் கொடுத்த வாக்குமூலம்… 100 கோடி பள்ளி ஊழல் வழக்கில் அன்பில் மகேஷ் மனைவிக்கும் பறக்கும் கைது வாரண்ட்..? பெரும் பரபரப்பு…!!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தமிழகம் முழுவதும் சுமார் 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்படத் தொடங்கின.
காவல்துறையின் விசாரணையில் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இந்த 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முக்கியப் புள்ளிகளாகச் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பல்வேறு உண்மைகளை போட்டுடைத்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஷின் இல்லங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இவ்வழக்கில் கைதாவதைத் தவிர்க்க அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவர் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் எனக் கூறி நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தற்போது நீதிமன்றம் அன்பில் மகேஷுக்கு வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்துள்ளது. இதற்கிடையே, பள்ளிகளிடம் லஞ்சமாகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதி அன்பில் மகேஷின் மனைவி ஜனனியிடம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வாக்குமூலத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்த ஊழல் வழக்கில் அடுத்த திருப்பமாக அவரது மனைவி ஜனனியும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
