LATEST NEWS
பெரும் பரபரப்பு..! அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி ஊழல் வழக்கு: பெண் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக CCB அதிரடி சோதனை..!!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் வழக்கு தொடர்பாக, சென்னை பெருங்குடியில் உள்ள பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் இல்லத்தில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில் அன்பில் மகேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, துணி மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் பெருங்குடி, காமராஜர் நகரில் உள்ள ‘ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ்’ அடுக்குமாடி குடியிருப்பில் 10 பேர் கொண்ட CCB போலீசார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து திரட்டப்பட்ட லஞ்சப் பணம் இவருடைய ஜவுளி வியாபாரம் மற்றும் பிற வணிக வழிகளில் முதலீடு செய்யப்பட்டதா அல்லது கைமாறியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மற்றும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் போலீசாரின் மனு ஆகியவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இச்சோதனை நடைபெறுகிறது. சண்முகப்பிரியாவின் நீலாங்கரை இல்லத்தைத் தொடர்ந்து தற்போது பெருங்குடி வீட்டிலும் நீடிக்கும் இந்தச் சோதனையின் மூலமாக, இந்த மெகா ஊழல் வழக்கில் மிக முக்கிய டிஜிட்டல் மற்றும் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
