LATEST NEWS
“யோவ் நாங்க ராணுவம்… துப்பாக்கிச் சூட்டையே பார்த்தவங்” சட்டையை மடிச்சுக்கிட்டு எங்ககிட்ட வராதீங்க.. உங்களால் அதை பண்ண முடியுமா..? காங்கிரஸுக்கு அன்புமணி சவால்..!!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “நாங்கள் ராணுவம், துப்பாக்கிச் சூட்டையே நேரில் பார்த்தவர்கள்; சட்டையை மடித்துக்கொண்டு எங்களிடம் ஆவேசம் காட்ட வேண்டாம்” என்று ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார். மேலும், கூட்டணி பலம் இல்லாமல் தனியாக நின்றால் ஒரு வார்டு கவுன்சிலர் இடத்தில் கூட காங்கிரஸால் ஜெயிக்க முடியாது என்று சவால் விடுத்துள்ளார்.
மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பதையும், தமிழக காங்கிரஸ் அதற்கு மழுப்பலாகப் பேசுவதையும் சுட்டிக்காட்டிய அன்புமணி, “கர்நாடக காங்கிரஸ் குழந்தையைக் கிள்ளுமாம், தமிழ்நாடு காங்கிரஸ் தொட்டிலை ஆட்டுமாம்” என்று பழமொழியை மேற்கோள் காட்டி இடித்துரைத்தார். காங்கிரஸ் கட்சி தமிழக மக்களை ஏமாற்ற நடத்தும் இந்த நாடகம் இனியும் செல்லுபடியாகாது என்றும், மாநில உரிமைகளில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த மேகதாது விவகாரத்தில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி நேரிடையாக வந்து தமிழக மக்களிடம் சொல்லத் துணிவிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி ஆற்றுப் படுகையில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாமல், இங்குள்ள உள்ளூர் தலைவர்கள் வீர வசனம் பேசுவது வெறும் அரசியல் ஏமாற்று வேலை என்று கூறி தனது கண்டனத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
