LATEST NEWS
எம்மாடியோ எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..! 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. ஆதார், பான் கார்டை திருடி நடந்த சதி.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஈடுபட்டு வரும் ருக்மணி என்ற மூதாட்டிக்கு, ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்துமாறு மத்திய அரசிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி கூலி வேலைக்குச் சென்று மிகக் கடினமான சூழலில் பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இடியாக இறங்கிய இந்த அதிரடி உத்தரவால் அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.இந்தத் தொகையைச் செலுத்தத் தவறியதால் அவரது வங்கிக் கணக்கும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவர் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைத்து 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பெற்ற சொற்ப சம்பளப் பணத்தைக் கூட வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். எழுதப் படிக்கத் தெரியாத தனக்கு வங்கிக் கணக்கில் கைநாட்டு வைத்து மட்டுமே பழக்கம் உள்ளதாகக் கூறும் அவர், இந்தத் தடையால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி நோட்டீஸில், அந்த மூதாட்டியின் பெயரில் ‘ஆர்.எம். ட்ரேடர்ஸ்’ என்ற வணிக நிறுவனம் இயங்கி வருவதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 100 நாள் வேலைக்காக அவர் வழங்கிய ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் எவரோ தவறாகப் பயன்படுத்தி, போலி நிறுவனம் தொடங்கி இந்த இமாலய மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
