LATEST NEWS
“அத்தனையும் பச்சைப் பொய்..” நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் கைது செஞ்சாங்க..! ஜெம் வீரமணி விவகாரத்தில் உண்மையை உடைத்த EPS..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எல்.எண்டத்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கால்கடுக்க நின்று அதிமுகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல், குதிரை பேரம் மூலம் பெட்டி வாங்கிப் பதவி ஆசையில் சென்றுவிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியைமைக்க வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு, சுயநலத்திற்காகச் சென்றவரை நிராகரித்து, அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி விவகாரம் குறித்துப் பேசிய அவர், “நேற்று முதல்வர் விஜய் வீரவசனம் பேசி, குழந்தைகளைச் சீரழித்தவர்களைத் தானே கைது செய்ததாகக் கூறியது அத்தனையும் பச்சைப் பொய். திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டரை மாதம் வாய்தா வாங்கித் தவெக அரசுதான் அவரைக் காப்பாற்றப் பார்த்தது. இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார். மேலும், போக்சோ வழக்கில் கைதானவரின் கலைமாமணி பிரகாஷ் முப்பெரும் விழாவில் தவெக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். உணவுத்துறை அமைச்சர், வீரமணியைத் தனது ‘குடும்ப நண்பர்’ என்று கூறியதன் மூலம் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசு இது என்பது வெளிப்பட்டுவிட்டது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, தவறான தகவல்களைக் கூறி மக்களிடம் அனுதாபம் தேடப் பார்க்கிறார்கள்” என்று சாடினார்.
மேலும் தவெக அரசின் நிதியமைப்பைப் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்ட உரிமைத் தொகை ரூ.2,500, முதியோர் உதவித்தொகை உயர்வு, விவசாயிகளுக்கு ரூ.15,000 போன்ற எந்தத் திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. கஜானாவை திமுக அரசு காலி செய்துவிட்டுச் சென்ற நிலையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது; இந்த ஆண்டும் ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர். கடன் பாரம் முழுவதும் மக்கள் தலையில்தான் விடியும். அதுமட்டுமின்றி, நாமக்கல் கவிஞர் மாளிகையில் கடல் காற்று பட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் அறை தயார் செய்ய ரூ.10 கோடி செலவிடப்படுகிறது” எனக் கடுமையாகச் சாடிப் பிரசாரம் செய்தார்.
