LATEST NEWS
“அம்மா என்கிட்ட பேச மாட்டேங்குறாங்க…” தாய் பேசாததால் போலீசிடம் சென்று அழுது புலம்பிய சிறுவன்.. காவல் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன், வீட்டில் இருந்த சோபாவை கிழித்து சேட்டை செய்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், சிறுவனை கண்டித்ததுடன், மீண்டும் சேட்டை செய்தால் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுவன், தான் செய்தது தவறு எனக்கூறி தாயிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளான். பின்னர் மாலையில் வழக்கம்போல் டியூஷனுக்கு சென்றுள்ளான். டியூஷன் முடிந்து வீடு திரும்பிய சிறுவன், தாயிடம் சகஜமாக பேசியுள்ளான். ஆனால், தாய் அவரிடம் பேச மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுவன், அம்மாவை பேச வைக்க வேண்டும் என முடிவு செய்து, வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தனியாக சென்றுள்ளான். அங்கு அழுதபடியே காவலர்களிடம், “நான் பேச்சைக் கேட்கவில்லை என்றால் போலீசிடம் சொல்லிவிடுவேன் என்று அம்மா சொன்னார்கள். ஆனால் இப்போது அவரே என்னிடம் பேசவில்லை. நீங்கள்தான் வந்து அம்மாவிடம் கூறி என்னுடன் பேச வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளான். மேலும், தனது தந்தையும் கத்தியை காட்டி மிரட்டுவதாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிறுவனை காணவில்லை என ஊர் முழுவதும் தேடிய பெற்றோர் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த தங்களது மகனை பார்த்ததும் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுவனிடம் காவலர்கள் அன்புடன் பேசி, பெற்றோர் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அதேபோல், பெற்றோருக்கும் குழந்தைகள் சேட்டை செய்தால் கண்டித்து திருத்த வேண்டுமே தவிர, கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் வளர்வார்கள் என்பதால் அவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி சிறுவனை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
