LATEST NEWS
பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி… ஏழ்மை குடும்பத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்..!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜலால் உஸ்மான் கிராமத்தில், பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுவன் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுக்விந்தர் சிங் என்பவரின் மகனான ரஞ்சித் சிங் (8), வழக்கம் போல் காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, கிராமத்து மைதானத்திற்கு அருகே சுற்றித்திரிந்த தெருநாய்கள் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளன. நாய்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவனின் தலை, முகம், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், வலது காதையும் நாய்கள் கடித்துத் துண்டாக்கியதில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான்.
உயிரிழந்த ரஞ்சித் சிங், மூன்று மூத்த சகோதரிகளுக்கு ஒரே தம்பியாவார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் வீட்டுக் கூரை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் இடிந்து விழுந்த நிலையில், அரசுப் பதிவேடுகளில் பெயர் பிழை இருந்ததால் அதற்கான நிவாரணத் தொகை கூட இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஒரே மகனையும் இழந்து தவிக்கும் குடும்பத்தினரைக் கண்டு கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கிராமத்தில் நீண்ட நாட்களாகத் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பாபா பகாலா சாஹிப் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
