LATEST NEWS
“திரிஷா இளைய புரட்சித்தலைவியா..? வெட்கக்கேடு” இதுதான் தமிழ்நாடா..? கொந்தளித்த அண்ணாமலை..!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஈகோ பார்க்காமல் சிபிஐ விசாரணை கோரி கடிதம் எழுத வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிறுமி மாயமாகி 40 நாட்கள் கடந்தும் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், முதல்வர் கடிதம் எழுதினால் மட்டுமே சிபிஐ-யால் விசாரணையைத் தொடங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் தொழில்துறையை வளர்க்க ஜப்பான், கொரியா என வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, கோவை, திருப்பூர் போன்ற உள்நாட்டுத் தொழில் நகரங்களில் முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி உள்ளூர் தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தங்கள் அமைப்பை பாஜகவின் முகமூடி என காங்கிரஸ் விமர்சிப்பதை மறுத்ததோடு, தாங்கள் தவெக அல்லது காங்கிரஸின் ‘பி’ டீமும் அல்ல என்றும், நடுநிலையாக நின்று புது அரசியலை நோக்கிப் பயணிப்பதாகவும் கூறினார். திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று எச்சரித்த அவர், மத நல்லிணக்கத்தைக் காரணம் காட்டி அரசே பிரச்சனையை உருவாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, “இளைய புரட்சித்தலைவியா? வெட்கக்கேடு! இதுதான் தமிழ்நாடா?” எனக் கேள்வி எழுப்பினார். 2014 தேர்தலில் தனித்து நின்று 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற மாணிக்கம் தாகூர், திமுக கூட்டணியாலேயே வெற்றி பெற்றதாகவும், தற்போது ராகுல் காந்தியை விஜய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ‘டிராவல் ஏஜென்ட்’ போல செயல்படுவதாகவும் அவர் சாடினார். மேலும், ஜனவரியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்துத் தாங்கள் தயாராகி வருவதாகவும் கூறி விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்றார்.
