LATEST NEWS
“முதல்வராக ஆசை” என அன்று சொன்ன த்ரிஷா… இன்று “இளைய புரட்சித்தலைவி” பெயரில் கொடி அறிமுகம்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி டுவிஸ்ட்..!!
திருநெல்வேலியில் நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பேரவையின் அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் கொடி அறிமுக விழா நாளை காலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது சமூக வலைதளங்களிலும் திரையுலக வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இருப்பினும், நெல்லையில் தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய நற்பணி இயக்கம் நடிகை த்ரிஷாவின் முழு சம்மதத்துடனும், முறையான அனுமதியுடனும் தொடங்கப்படுகிறதா என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களது பெயரில் ரசிகர் மன்றங்கள் அல்லது நற்பணி இயக்கங்கள் தொடங்கப்படும்போது அது குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை த்ரிஷா, எதிர்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் குறிப்பிட்டிருந்தது தற்போது மீண்டும் நினைவுகூரப்படுகிறது. அந்தப் பழைய பேட்டியைத் தொடர்ந்து, தற்போது ‘இளைய புரட்சித்தலைவி’ என்ற அடைமொழியுடன் அவருக்குப் பேரவை தொடங்கப்படுவது, அவரது எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னோட்டமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
