LATEST NEWS
“ஆபரேஷன் தியேட்டரில் ரீல்ஸ் மோகமா..?” சிசேரியன் பிரசவத்தை வீடியோ எடுத்து பதிவிட்ட பெண் மருத்துவர்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்… மருத்துவ உலகையே உலுக்கிய சம்பவம்..!!
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி அரசு மருத்துவமனையில், மருத்துவ விதிகளையும் நெறிமுறைகளையும் மீறிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணியாற்றும் பெண் மருத்துவர் டாக்டர் கின்ஜல் பாரிக், அறுவை சிகிச்சை அறையின் கடுமையான விதிகளைப் பொருட்படுத்தாமல் கர்ப்பிணிப் பெண்ணின் சிசேரியன் பிரசவத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறுவை சிகிச்சை மேசையில் படுத்திருக்கும் நோயாளி மற்றும் முழு அறுவை சிகிச்சை செயல்முறையும் தெளிவாகக் காட்டப்பட்ட அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கடும் கொந்தளிப்பும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை அறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல யார் அனுமதி அளித்தது மற்றும் வீடியோ எடுப்பதற்கும் பகிர்வதற்கும் முன்பு நோயாளியிடமோ அவரது குடும்பத்தினரிடமோ எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டதா என்ற தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன. மருத்துவ விதிகளின்படி, நோயாளியாக இருந்தாலும் சரி, மருத்துவராக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை அறைக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்வது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு மருத்துவச் செயல்முறையின் புகைப்படத்தையோ வீடியோவையோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது தடை செய்யப்பட்ட சட்டவிரோதச் செயலாகும்; நோயாளியின் ரகசியத்தன்மையையும் பாதுகாப்பையும் காப்பது மருத்துவரின் முதன்மைக் கடமை என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (MCI) 2002-ஆம் ஆண்டு நடத்தை விதிகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோயாளியின் தனிநபர் ரகசியம் மீறப்பட்டதற்கு எதிராக மக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் விழித்துக்கொண்டுள்ளது. சர்ச்சை அதிகரித்து வருவதை அடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட மருத்துவர் டாக்டர் கின்ஜல் பாரிக்கிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
