LATEST NEWS
BREAKING:குடிநீரில் ரசாயனம் கலப்பா..? உண்மையை உடைத்த பிஸ்லெரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை..!!
பிரபல குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி தயாரிக்கும் குடிநீர் பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட தகவல்களுக்கு அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்களிடையே எழுந்த அச்சத்தைப் போக்கும் வகையில் பிஸ்லெரி நிறுவனம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் கோவாவில் உள்ள தங்களது உற்பத்தி ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட 6 குடிநீர் மாதிரிகளில், ஒரே ஒரு மாதிரியில் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 2 மைக்ரோகிராம் கூடுதலாகப் புரோமேட் இருப்பது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாகத் தாங்கள் மேற்கொண்ட மேல்முறையீட்டுப் பரிசோதனையில், அந்தக் குடிநீரின் தரம் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்பிற்குள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பிஸ்லெரி நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
நுகர்வோருக்குத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதே தங்களது முதன்மை இலக்கு என்றும், தங்களது அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் மிகக் கடுமையான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் பிஸ்லெரி நிறுவனம் அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி பிஸ்லெரி குடிநீரைப் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
