“கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்ட கர்ப்பிணி மனைவி சடலம்..” அழுது நாடகமாடிய கணவனின் முகத்திரையைக் கிழித்த போலீஸ்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்ட கர்ப்பிணி மனைவி சடலம்..” அழுது நாடகமாடிய கணவனின் முகத்திரையைக் கிழித்த போலீஸ்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருந்தாளுநர் மிதேஷ் படேல் என்பவர், தனது மனைவி ஜெசிகாவைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு அதனைக் கொள்ளைச் சம்பவம் போல நாடகமாடிய அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர், பிரிட்டனின் லின்த்வெயிட் பகுதியில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வசதியாக வாழ்ந்து வந்தனர். திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாத ஏக்கத்தில் இருந்த ஜெசிகாவுக்கு, 2018 மே 9-ஆம் தேதி ஐ.வி.எஃப் சிகிச்சை மூலம் கருத்தரிப்பதற்கான நற்செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைப்பதற்குள்ளாகவே, ஐந்தே நாட்களில் அதாவது மே 14-ஆம் தேதி இரவு 8:22 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு விடுத்த மிதேஷ், தான் உணவகத்திற்குச் சென்று திரும்பியபோது வீடு சூறையாடப்பட்டிருந்ததாகவும், தனது மனைவி கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதாகவும் கதறி அழுது நாடகமாடினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஜெசிகா உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூடத் திருடு போகவில்லை என்பதையும், கொள்ளை நடந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும், சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிரைவ் மற்றும் ஜெசிகாவின் செல்போன் திருடு போனதாக மிதேஷ் கூறிய நிலையில், காவல்துறையினர் வீட்டை அங்குலம் அங்குலமாகச் சோதனையிட்டதில், ஜெசிகாவின் செல்போன் வீட்டிற்கு வெளியிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்தும், சிசிடிவி ஹார்ட் டிரைவ் அவர்களது படுக்கைக்கு அடியிலிருந்தும் மீட்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மே 14-ஆம் தேதி மாலை 7:10 மணிக்கு ஜெசிகா வீட்டிற்குள் வந்த பிறகு, மிதேஷ் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கும் வரை வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை என்பது உறுதியானது.

Advertisement

காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், மிதேஷ் படேல் வாக்குமூலம் அளித்த உண்மைகள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. உண்மையில் மிதேஷிற்குப் பெண்கள் மீது ஈர்ப்பு இல்லை என்பதும், தன்பாலின ஈர்ப்பாளரான அவர் தனது மதக் குடும்பத்திற்குப் பயந்து ஜெசிகாவைத் திருமணம் செய்து கொண்டு 9 ஆண்டுகளாகத் தாம்பத்திய உறவு இல்லாமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அமித் படேல் என்ற ஆணுடன் காதல் வயப்பட்டிருந்த மிதேஷ், ஜெசிகாவுக்குக் குழந்தை பிறந்துவிட்டால் அவரை விட்டுப் பிரிய முடியாது என அஞ்சியுள்ளார். இதனால் அமித் படேலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டிய மிதேஷ், ஜெசிகா வீட்டிற்குள் நுழைந்ததும் அவருக்கு அதிகப்படியான இன்சுலின் ஊசியைச் செலுத்தி மயக்கமடையச் செய்து, பின்னர் டேப்பால் வாயை மூடி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரக் கொலைக்குப் பின்னால் சுமார் 18 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணம் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. கொலை செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஜெசிகாவின் பெயரில் 18 கோடி ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்த மிதேஷ், ஜெசிகாவைக் கொன்று அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஆஸ்திரேலியா சென்று அமித் படேலுடன் ஆடம்பர வாழ்க்கை வாழத் திட்டமிட்டிருந்தார். 9 ஆண்டுகளாகத் தனது கணவர் தன்னை நேசிக்கவில்லை என்பதை உணர்ந்தும், இந்தியப் பாரம்பரிய மதிப்புகளுக்காகவும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையிலும் பொறுமையாகக் காத்திருந்த அப்பாவி ஜெசிகா, தான் உயிருக்குயிராக நம்பிய கணவராலேயே பணத்திற்காகக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in