CRIME
“வீட்டை விட்டு வெளியே வா….” அதிகாலையில் வந்த மர்ம போன் கால்.. வெளியே வந்த அடுத்த நொடியே அரசு ஊழியருக்கு நேர்ந்த கொடூர கதி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் கோதாவரிகானியில், சிங்கரேணி நிலக்கரி நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்து போன் மூலம் வெளியே வரவழைக்கப்பட்டுக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோதாவரிகானியில் உள்ள பவர்ஹவுஸ் காலனி பகுதியில் வசித்து வந்த 30 வயதான ராஜசேகர் என்பவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார். திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டத் தகவல்களின்படி, ராஜசேகரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட இளைஞர் கும்பல் ஒன்று, அதிகாலையில் அவரது செல்போனுக்கு அழைத்து வீட்டிற்கு வெளியே வருமாறு நைசாகப் பேசி வரவழைத்துள்ளது. அதனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த ராஜசேகரைச் சுற்றி வளைத்த அந்தக் கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நான்கு இளைஞர்கள் கொண்ட கும்பல் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கோதாவரிகானி காவல்துறையினர், ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய 4 குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
