CRIME
திருச்சியில் பயங்கரம்.. மரத்தின் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி வேன்.. 5 பேர் உடல் நசுங்கிப் பலி..நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் ஒன்று சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முசிறியிலிருந்து துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஜம்புநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன், எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் ஆம்னி வேனின் முன்பகுதி முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியதில், வாகனத்தில் பயணித்த 5 பேர் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜம்புநாதபுரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கியவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து எங்குச் சென்று கொண்டிருந்தார்கள் என்பது குறித்த முழு விவரங்களைச் சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
