CRIME
“யாரு கூட பேசிகிட்டு இருக்க..?” 16 வயது மாணவியைக் கொடூரமாக கொன்று இளைஞர் செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவியை, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் அருகேயுள்ள சோலை புதூர் வேதமாணிக்கபுரத்தைச் சேர்ந்த காசி பாண்டியனின் மகன் முத்துராஜா (23), அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான அபர்ணா, செபத்தையாபுரத்தில் உள்ள முத்துமலை அம்மன் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
முத்துராஜாவுக்கும் மாணவி அபர்ணாவுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்த நிலையில், அபர்ணா தொலைபேசியில் வேறு ஒருவருடன் பேசுவதாக முத்துராஜா சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், பள்ளி விடுமுறை காரணமாகச் நேற்று அபர்ணா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்து அவரது வீட்டிற்குச் சென்ற முத்துராஜா, தொலைபேசியில் பேசுவது தொடர்பாக அபர்ணாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரமடைந்த முத்துராஜா தான் வைத்திருந்த கத்தியால் மாணவியைத் தாக்கியதுடன், கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மாணவியைக் கொலை செய்த பிறகு, முத்துராஜாவும் கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்று வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார். வீட்டிற்குள் நடந்த சத்தத்தைக் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், மாணவி உயிரிழந்திருப்பதையும் முத்துராஜா ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகப் படுகாயமடைந்த முத்துராஜாவை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த மாணவி அபர்ணாவின் உடல் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
