CRIME
“நான் செய்தது தவறுதான், மன்னித்துவிடுங்கள்… பிரபல பயங்கரவாதியைத் தீர்த்துக்கட்டப் போட்ட மாஸ்டர் பிளான்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!!
நியூயார்க்கில் உள்ள அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில் இந்திய நாட்டவரான நிகில் குப்தாவுக்கு (55) 235 மாதங்கள் (சுமார் 19.5 ஆண்டுகள்) சிறைத் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மர்ரேரோ இந்தத் தண்டனையை அறிவித்ததோடு, சிறைத் தண்டனை முடிந்த பிறகு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தச் சதித் திட்டம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார்; விசாரணையின் போது அவர் பன்னூனிடமும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடமும் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார்.
2023-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பன்னூனைக் கொலை செய்ய கூலிப்படையை அமர்த்த நிகில் குப்தா முயன்றதாகவும், அதற்காக ரகசிய அதிகாரி ஒருவருக்கு முன்பணமாக 15,000 அமெரிக்க டாலர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான விகாஷ் யாதவ் இன்னும் அமெரிக்கக் காவலில் இல்லை என்றும், நிகில் குப்தா 2023-இல் பிராக்கில் கைது செய்யப்பட்டு 2024-இல் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் கனடா குடியுரிமை கொண்ட குர்பத்வந்த் சிங் பன்னூனை இந்தியா 2020-ஆம் ஆண்டில் பயங்கரவாதியாக அறிவித்ததுடன், அவர் சார்ந்த அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளதுடன், இதுகுறித்து விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை ஆதாரமற்ற வழக்குகளை நிராகரிப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
