CRIME
அம்மாடியோ.. நள்ளிரவில் கட்டிலோடு 20 அடி பாதாளத்திற்குள் விழுந்த பெண்.. வீட்டிற்குள் திடீரெனப் பிளந்த பூமி.. தோண்டிப் பார்த்தபோது காத்திருந்த மன்னர் காலத்து மர்மம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள அனுராக் மிஸ்ரா என்பவரின் பூர்வீக வீட்டில், 2026 நவம்பர் 4-ஆம் தேதி இரவு ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் விபத்து நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் ஒரு சுப நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்த நிலையில், அனுராக் மிஸ்ராவின் சகோதரர் மனைவியான 45 வயது நிஷி மிஸ்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு சுமார் 9:00 மணியளவில் அவர் உணவருந்திவிட்டுத் தனது படுக்கை விரிப்பை மாற்றிக்கொண்டிருந்தபோது, கட்டிலுக்கு அடியில் இருந்த தரைப்பகுதி திடீரெனப் பயங்கர சத்தத்துடன் உள்வாங்கியது. இதனால் நிஷி மிஸ்ரா கட்டிலோடு சேர்ந்து சுமார் 15 முதல் 20 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் விழுந்தார்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அனுராக் மிஸ்ரா மற்றும் குடும்பத்தினர், வீட்டிற்குள் பெரிய பள்ளம் ஏற்பட்டு நிஷி மிஸ்ரா உள்ளே விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஒரு ஏணியைப் பள்ளத்திற்குள் இறக்கி, மயக்கமடைந்த நிலையில் இருந்த நிஷி மிஸ்ராவை மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து நலம்பெற்றார்.
வீட்டிற்குள் திடீரென இவ்வளவு ஆழமான பள்ளம் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு செய்தபோது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வரலாற்றுப் பின்னணி தெரியவந்தது. அதாவது, சிந்தியா சமஸ்தானத்தின் ஆட்சிக் காலத்தில், மக்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்ட தானியங்களைச் சேமித்து வைப்பதற்காக அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான பாதாள தானியக் கிடங்கு அமைக்கப்பட்டிருந்தது.
காலப்போக்கில் 1980-ஆம் ஆண்டில், அந்த ஆழமான தானியக் குழியின் மேற்பகுதியை மட்டும் மூடிவிட்டு அதன் மீது வீடு கட்டியுள்ளனர். ஆனால், பல ஆண்டுகளாகத் தரைக்கு அடியில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக மண் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு, தரைப்பகுதி உள்ளே வெற்றிடமாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே நிஷி மிஸ்ரா படுக்கை விரிப்பை மாற்றிக்கொண்டிருந்தபோது பலவீனமடைந்த தரை இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
