CRIME
“உங்கள் அம்மா இறந்துவிட்டார், எங்கிருந்தாலும் வாருங்கள்…” மகள்களைத் தேடிப் பத்திரிகையில் வெளியான நெஞ்சை உலுக்கும் விளம்பரம்..!!
நவீன உலகில் வேலைவாய்ப்பு மற்றும் உலகமயமாதல் காரணமாகக் கூட்டுக்குடும்ப அமைப்புகள் சிதைந்து, பெற்றோர்களைத் தனியே விட்டுவிட்டு பிள்ளைகள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்பவர்களில் சிலர் தங்கள் வயதான பெற்றோரைக் கண்டுகொள்ளாமல் தவிக்க விடுவதால், முதியவர்கள் தனிமையிலேயே உயிரிழக்கும் அவலச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவரும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வந்தவருமான லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டிக்கு நேர்ந்த துயரச் சம்பவம் தற்போது இணையவாசிகளின் இதயத்தை உலுக்கியுள்ளது.
கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகள்களுடனும் எந்தத் தொடர்பும் இல்லாமல் மும்பை வீட்டில் தனியே வசித்து வந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி, கடந்த நவம்பர் 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளப் பல வழிகளில் முயன்றனர். ஆனால், அவர்கள் குறித்த எந்தவொரு விவரமும் கிடைக்காததால், மனிதநேயத்துடன் முன்வந்த அக்கம் பக்கத்தினரே ஒன்றுசேர்ந்து லலிதா கிருஷ்ணமூர்த்திக்குரிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்து முடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, லலிதா கிருஷ்ணமூர்த்தியின் மறைவைத் தெரிவித்தும், அவரது இரண்டு மகள்கள் மற்றும் பிற உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் நாளிதழ் ஒன்றில் விளம்பரமும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்தப் பத்திரிகை அறிவிப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பு இன்றித் தனிமையில் வாடும் முதியவர்களின் வலியையும், ரத்த சொந்தங்கள் கைவிட்ட நிலையிலும் அக்கம் பக்கத்தினர் காட்டிய மனிதநேயத்தையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
