CRIME
“மேலே ஐஸ்கிரீம்.. உள்ளே ரூ.700 கோடி போதைப்பொருள்… ” சினிமாவையே மிஞ்சிய கடத்தல் சம்பவம்..! பின்னணியில் சர்வதேச நெட்வொர்க்..!!
சென்னை மாதவரத்தில் இருந்து ஐஸ்கிரீம் வண்டி மூலம் ‘ஹெராயின்’ போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த ஐஸ்கிரீம் வண்டியை மடக்கி சோதனை நடத்தினர். அந்த வண்டியில் இருந்த ஐஸ் பெட்டிக்குள் மேல் பகுதியில் ஐஸ்கிரீம்களை வைத்து, அதற்குக் கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 70 கிலோ ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வண்டியை ஓட்டி வந்த அப்துல் ஷூக்கூர், சபீர் அகமது ஆகிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அதன் தரத்திற்கு ஏற்ப மதிப்பிடப்படும் நிலையில், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.2 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்கப்படுவதால், இதன் மதிப்பு ரூ.140 கோடியில் இருந்து ரூ.700 கோடி வரையில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்தக் கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டது யார் என்பது குறித்து விசாரணை வளையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஐஸ்கிரீம் வியாபாரிக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்த விசாரணையில், சென்னையில் இருந்து திருச்சி வழியாக இலங்கைக்கு ஹெராயினைக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஐஸ்கிரீம் வியாபாரியான அப்துல் சுக்கூருக்கு மருத்துவ செலவுக்காக ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவிய கடத்தல் கும்பல், பின்னர் அவரைக் கடத்தல் பணியில் ஈடுபடுத்தியதாகவும், இதற்காக ரூ.3 லட்சம் வழங்கப் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
