CRIME
“உன் மனைவியைப் பார்த்தால் அந்தரங்கப் போட்டோவை லீக் செய்வேன்..!” 22 வயது இளம்பெண்ணின் மிரட்டலால் சப்-இன்ஸ்பெக்டர் செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான ரோலி என்ற இளம்பெண், காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பலரையும் தனது காதல் வலையில் வீழ்த்திப் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு தனது 17-வது வயதில் அஜித் என்ற இளைஞருடன் பழகி, பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி 2021-இல் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த ரோலி, 2024-ஆம் ஆண்டு விமலேஷ் யாதவ் என்ற காவலரையும் இதே பாணியில் காதலித்துப் பணம் தர மறுத்ததால் அவர் மீதும் பாலியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், 2023-இல் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்து பல்லியா நகர் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சந்தீப் பிரஜாபதி என்பவரை ரோலி ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். திருமணமாகி 6 மாதக் குழந்தை இருந்தபோதிலும், பணி மாற்றம் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த சந்தீப்பின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட ரோலி, அவருடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார்.
சந்தீப் தங்கியிருந்த காவலர் குடியிருப்பிற்கே நேரில் சென்று பழகிய ரோலி, அங்கிருந்து திரும்பியதும் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். சந்தீப்பிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, “உன் மனைவி ராகினியை நீ சந்தித்தால், என்னிடம் இருக்கும் உனது அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவேன்” என பிளாக்மெயில் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சந்தீப், நடந்த அனைத்தையும் தனது மனைவி ராகினியிடம் கூறியுள்ளார். மனைவி ராகினி அவருக்கு ஆறுதல் கூறி போலீசில் புகார் அளிக்குமாறு தைரியம் கொடுத்தபோதிலும், அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியானால் வேலை போய்விடுமோ, சமூகத்தில் அவமானம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் பிரஜாபதி, விரக்தியின் உச்சத்திற்குச் சென்று ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சந்தீப்பின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவி ராகினி துணிச்சலாக முன்வந்து ரோலி மீது பெயர் குறிப்பிட்ட புகார் அளித்தார். தனது கணவரின் தற்கொலைக்கு ரோலியின் பண மிரட்டலும், அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவேன் என்ற பிளாக்மெயிலுமே காரணம் என ராகினி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது ரோலியைக் கைது செய்துள்ளனர். சந்தீப் எவ்வாறெல்லாம் மிரட்டப்பட்டார், இந்த ‘ஹனி டிராப்’ மோசடியின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
