CRIME
“கர்ப்பிணிக்கு ரத்த தானம் செய்ய வந்த இளைஞர்..” கதவைப் பூட்டி உள்ளே நடந்த ‘அந்த’ பயங்கரம்.. வெளியே கதறித் துடித்த குடும்பம்.. போலி மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!
மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு ரத்த தானம் செய்ய முன்வந்த சகேந்தர் கான் என்ற இளைஞர், மருத்துவமனை உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பருடன் மருத்துவமனைக்குச் சென்ற சகேந்தர் கான், அங்கு ரத்த சோகை காரணமாகப் போராடிக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு ரத்த தானம் செய்ய முன்வந்தார். ஆனால், மருத்துவமனை உரிமையாளரான மருத்துவர் ரத்த தானத்தை ஏற்க மறுத்ததுடன், அந்தப் பெண்ணை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். கர்ப்பிணிப் பெண்ணை அவர்கள் நடத்திய விதம் குறித்து சகேந்தர் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவரும் அவரது ஊழியர்களும், சகேந்தரை மருத்துவமனைக்குள் இழுத்துச் சென்று கதவைப் பூட்டி, ஹாக்கி மட்டை மற்றும் இரும்புக் கம்பிகளால் அவரது தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். வெளியே நின்ற அவரது குடும்பத்தினர் கதறி அழுதபோதும், அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது; ஆத்திரமடைந்த மக்கள் ஆம்புலன்ஸுக்குத் தீ வைத்ததோடு, மருத்துவமனையையும் சூறையாடி சுமார் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த சகேந்தர் கான் அடுத்தடுத்து மூன்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நவம்பர் 14-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனை உரிமையாளரான மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் சௌரவ் குமார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்; மேலும் தலைமறைவாக உள்ள மருத்துவரின் சகோதரர் ரஞ்சய் உள்ளிட்ட 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், சுகாதாரத் துறை நடத்திய விசாரணையில், அந்த மருத்துவமனை எவ்வித உரிமமும் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது.
