CRIME
ஏழைகளின் வயித்துல அடிச்சி கோடீஸ்வரர்… ரேஷன் அரிசியை கேரளாவுக்கு விற்று ரூ.12 கோடி சுருட்டிய தம்பதி… மோசடிப் பணத்தில் ரூ.3 கோடி சொகுசு வீடு, புதிய ஆலை.. அதிர்ச்சி பிண்ணனி..!!
தமிழக அரசின் பொது வினியோகத் திட்டத்திற்கான நெல் மற்றும் அரிசியை கேரளாவுக்கு விற்றுப் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மற்றும் அவர்களது மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த சண்முகம், அவரது மனைவி வனிதா மற்றும் மகன் ரெங்கராஜன் ஆகியோர் பொய்கைப்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வந்ததுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் அரவை முகவராகவும் செயல்பட்டு வந்தனர். கடந்த 2025-ம் ஆண்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக இவர்களது ஆலைக்கு ரூ.22.20 கோடி மதிப்பிலான 3,700 டன் நெல் அரவைக்காக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நெல்லை அரவை செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பாமல், நெல்லையும் அரிசியையும் கேரள வியாபாரிகளுக்கு சுமார் ரூ.12 கோடிக்கு விற்று இவர்கள் மோசடி செய்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகம், வனிதா, ரெங்கராஜன் ஆகிய மூவரையும் நவம்பர் 10-ம் தேதி கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடிப் பணத்தின் மூலம் சண்முகமும் அவரது மனைவியும் மணப்பாறையில் ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு கட்டி வருவதுடன், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒரு அரிசி ஆலையையும் கட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, பழைய ஆலையை நவீனமயமாக்கியுள்ளதும், பல இடங்களில் நிலங்கள் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளதால், அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
