CRIME
“அடச்சீ பணத்திற்காக இப்படியா..?” சாக்குப்பையில் கற்களைக் கட்டி அணையில் வீசப்பட்ட 78 வயது மூதாட்டி சடலம்.. சொந்த பேரனின் வெறிச்செயல்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
கர்நாடக மாநிலம் ஹுக்கேரி தாலுகாவில் உள்ள அரளிகட்டி கிராமத்தில், அரசின் ‘கிருஹலட்சுமி’ திட்டத்தின் கீழ் கிடைத்த பணத்திற்காக 78 வயதான தனது சொந்தப் பாட்டியை 20 வயது பேரன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 10-ஆம் தேதி சந்தைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற ஹம்மவ்வா பாலப்பா சனதி (78) மாயமான நிலையில், நவம்பர் 15-ஆம் தேதி ஜினரால் கிராமத்திற்கு அருகே உள்ள கடபிரபா அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் கற்கள் கட்டப்பட்ட இரண்டு சாக்குப்பைகளில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து யமகனமரடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாகத் தனது பாட்டிக்குக் கிடைத்த கிருஹலட்சுமி திட்டப் பணத்தில் பங்கு கேட்டுத் தொந்தரவு செய்து வந்த அவரது பேரன் பீமப்பா ராமப்பா சனதி (20), தொழில் தொடங்கப் பணம் தர மறுத்த பாட்டியைக் கவிசித்தேஸ்வரா மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது.
கொலைக்குப் பிறகு பாட்டியிடமிருந்த ரூ.2,300 ரொக்கம் மற்றும் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்ட பீமப்பா, தடயங்களை அழிப்பதற்காக உடலைச் சாக்குப்பையில் கட்டி, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அணையில் வீசியதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சித் திருப்பமாக, கொலை செய்த பிறகு வீட்டிற்குத் திரும்பிய பீமப்பா நடந்த அனைத்தையும் தனது தந்தை ராமப்பாவிடம் கூறியுள்ளார்; ஆனால், ராமப்பா காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் தனது தாயின் கொலையை மறைக்க முயன்றது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, கொலை செய்த பேரன் பீமப்பா மற்றும் கொலையை மறைக்க முயன்ற மகன் ராமப்பா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
