CRIME
“ஆடை, மேக்கப் செலவுக்காக வாங்கிய கடன்..” பீரோவை உடைத்து, மிளகாய்ப் பொடி தூவி மாஸ்டர் பிளான் போட்ட மகள்.. போலீசைத் திசைதிருப்ப முயன்ற ஆசிரியைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ராணிப்பேட்டையை அதிரவைத்த கொலை..!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடம்பரச் செலவுக்காகப் பெற்ற தாயையே ஆசிரியை ஒருவர் கொலை செய்து, கொள்ளை நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தங்கள் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரவியின் மனைவி கீதா (54), அப்பகுதியிலுள்ள ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர்களது மூத்த மகளான சரண்யா, தனியார் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கணவரிடம் விவாகரத்து பெற்ற சரண்யா, தனது இரண்டு மகன்களுடன் தாய் கீதாவின் வீட்டில் வசித்து வந்தார். ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்காகக் கடன் வாங்கி ஆடம்பரமாகச் செலவு செய்து வந்த சரண்யாவுக்கும், அதைக் கண்டித்து வந்த தாய் கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடன்களை அடைக்க அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால், சம்பவத்தன்று காலை தனது இரு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தாயிடம் நகைகளைத் தருமாறு சரண்யா கேட்டுள்ளார். அப்போது, திருமணத்திற்குப் பல லட்சம் செலவு செய்ததையும், சரண்யாவின் நடத்தை குறித்தும் கீதா சுட்டிக்காட்டி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சரண்யா, அங்கிருந்த கயிற்றால் தாய் கீதாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். கீதா மயங்கிச் சரிந்த பிறகும், அவர் உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கழுத்துப் பகுதியில் காலால் மிதித்து சரண்யா கொலை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, தாய் கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணத்தை சரண்யா எடுத்து மறைத்து வைத்துள்ளார். வெளியாட்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தது போல் காட்டுவதற்காகப் பீரோவை உடைத்துப் போட்டதோடு, காவல்துறையின் மோப்ப நாய்களிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். மேலும், தடயங்கள் சிக்காமல் இருக்கக் கைரேகைகள் பதியாதவாறு துணியால் துடைத்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பேரன் மூலம் கீதா உயிரிழந்த தகவல் வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலை அருகே வீடு அமைந்திருப்பதால் வெளியாட்கள் நுழைந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் காவல்துறையினர் சந்தேகித்தனர்.
ஆனால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று காலையில் சரண்யாவும், பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் மட்டுமே வெளியே சென்றது பதிவாகியிருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்ததில், சரண்யாவுக்கும் அவரது தாய்க்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து சரண்யாவிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், தாயைக் கொலை செய்து கொள்ளை நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சரண்யாவைக் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
