LATEST NEWS
“அரசியலையும் தாண்டிய அழகான ஃபிரேம்…” ஸ்டாலின், ரஜினியுடன் முதல்வர் விஜய் சந்தித்த மாஸ் தருணம்.. தெறிக்கவிடும் ரிசப்ஷன் கிளிக்ஸ்..!!
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, இத்தம்பதியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த வரவேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் நீல நிற கோட் அணிந்து கம்பீரமாகக் கலந்துகொண்டு, புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா மாறனுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
இந்த விழாவின் மிக முக்கிய மற்றும் சுவாரசியமான நிகழ்வாக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் நேரில் சந்தித்துக்கொண்ட தருணம் அமைந்தது. தவெக அரசு மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல், சினிமாவிலிருந்து விலகி கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த பிறகு, ரஜினிகாந்தை முதலமைச்சர் விஜய் முதல்முறையாக நேரில் சந்தித்துள்ளார். மூவரும் ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும், இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
