LATEST NEWS
“இது பச்சைத் துரோகம் CM Sir..” 9 மீனவர்கள் மரணம் முதல் அதானி சந்திப்பு வரை.. முதல்வர் விஜய்யிடம் அப்பாவு அடுக்கிய பகீர் கேள்விகள்..!!
மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவரது உடலைத் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வி.எஸ். பாபுவின் மரணம் குறித்து ஏற்கனவே பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இடைத்தேர்தல் வாக்குகளுக்காகவே மறைந்த வி.எஸ். பாபுவின் உடலை முதலமைச்சர் விஜய் தோளில் சுமந்து சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சென்னையில் முதலமைச்சரின் வீட்டிற்கு அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 ஏழை மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு நேரில் செல்லாத முதலமைச்சர், அதே நாளில் ஆந்திர செல்வந்தர் ரெட்டி குடும்பத் திருமண விழாவிற்குத் தனது தோழியுடன் சென்றதாக அப்பாவு விமர்சித்துள்ளார்.
அந்தத் திருமண விழாவில் தொழிலதிபர் அதானியைச் சந்தித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடிமாட்டு விலைக்குக் கொடுக்க முதலமைச்சர் துணிந்துவிட்டாரா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே மின்சாரத் துறையில் ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பாவு குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது மின் வாரிய விற்பனை குறித்து எழுப்பியுள்ள இந்தக் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அந்தப் பதிவில், தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அனைத்துத் தொழில் நிறுவனங்களையும் கைடன்ஸ் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மற்றும் ‘ஆந்திரா ரெட்டி கேங்’ ஆகியோர் இணைந்து ஆந்திராவிற்கு அனுப்பிவிட்டதாக அப்பாவு சாடியுள்ளார். ஆந்திர முதலமைச்சரின் ‘டூப்’ முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஆந்திராவிற்குத் தாரை வார்க்கும் இந்தத் துரோகச் செயலைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
