LATEST NEWS
அம்பாசமுத்திரத்தில் திமுக-வின் மெகா ட்விஸ்ட்.. ஸ்டாலின் டேபிளுக்குப் போன 3 முக்கியப் புள்ளிகள் லிஸ்ட்.. யாருக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்..? அரசியல் களத்தை அதிரவைத்த தகவல்..!!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில்இணைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுவது குறித்து அக்கட்சித் தலைவர் விஜய் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள் மற்றும் கிராமம் தோறும் வாக்கு சேகரிப்புப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுவிட்டன; மேலும், அதிமுக நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவு திரட்டும் பணிகளிலும் இசக்கி சுப்பையா தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மறுபுறம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் இறங்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்தில் அம்பாசமுத்திரத்திலேயே முகாமிட்டுத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நாம் தமிழர் கட்சி, ராக்கெட் ராஜா தரப்பின் ஆதரவை நாடியுள்ளதுடன், முக்குலத்தோர் சமூக வாக்குகளைக் கவரும் வகையில் சீமானின் மனைவி கயல்விழியையும் நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய பரபரப்பான சூழலில், திமுக சார்பில் யாரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பது குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தனது மகன் பிரபாகரனுக்கு வாய்ப்புப் பெறத் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஆவுடையப்பன் ஏற்கனவே இத்தொகுதியில் பலமுறை தோல்வியடைந்துள்ளதால் அவரது குடும்பத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் வாக்கு வங்கி குறையக்கூடும் என உள்ளூர் நிர்வாகிகள் சிலர் கட்சித் தலைமையிடம் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, திமுக ஒன்றியச் செயலாளர் மாரிவண்ண முத்துவின் பெயரை ஒரு தரப்பு நிர்வாகிகள் தலைமைக்குப் பரிந்துரைத்துள்ள அதேவேளையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. மும்முனைப் போட்டி உருவாகியுள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில், உள்ளூர் நிர்வாகிகளின் பரிந்துரைகள் மற்றும் தொகுதி நிலவரங்களை ஆராய்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இறுதியாக யாருக்கு வாய்ப்பளிப்பார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
