LATEST NEWS
“மணிப்பூரில் அரங்கேறிய மரண ஓலம்” கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் பலி… 370-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!
மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் உள்ள சாக்பிகரோங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 370-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மெத்தனால் நச்சுத் தாக்குதல் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் இம்பாலில் உள்ள ஷிஜா, பபினா, ஜே.என்.ஐ.எம்.எஸ். மற்றும் ஆர்.ஐ.எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூர் முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று நோயாளிகளின் உடல்நலனை விசாரித்ததோடு, சந்தேல் மாவட்டத்திற்கு சிறப்பு மருத்துவக் குழு மற்றும் அத்தியாவசிய மருந்துகளையும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானம் அண்டை மாவட்டமான காக்சிங்கில் உள்ள சுக்னு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உள்ளூர் மதுபானங்களைத் தவிர்க்குமாறும், வாந்தி, மங்கலான பார்வை, வயிற்று வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
