“கொளத்தூர் இடைத்தேர்தலில் ஸ்டாலின் நின்றால்..!” சொந்தக் கட்சியை அதிர வைத்த நாஞ்சில் சம்பத் பேட்டி.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொளத்தூர் இடைத்தேர்தலில் ஸ்டாலின் நின்றால்..!” சொந்தக் கட்சியை அதிர வைத்த நாஞ்சில் சம்பத் பேட்டி.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!

Published

on

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு, உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் 72 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்த இவரது மறைவு தவெகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, கொளத்தூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டுச் சட்டமன்றத்திற்குள் நுழைவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்துத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத், கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் களமிறங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி அவர் போட்டியிட்டால் அது தவெகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போது ஆளும் தவெக அரசுக்கு எதிராக மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் சம்பத், தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மற்றும் ரூ.2,500 உரிமைத் தொகை ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததைக் காரணம் காட்டி, ஏழை மக்களை திமுக தங்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் கல்லூரிகள், மருத்துவமனைகள் எனப் பல நலத்திட்டங்களைச் செய்திருப்பதால், அவரைத் தோற்கடித்து விட்டோமோ என்ற மனநிலை அப்பகுதி மக்களிடம் நிலவுவதை நேரில் சென்றபோது உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நேற்று கொளத்தூர் சென்றிருந்தபோது அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோர், “இடைத்தேர்தல் வரும், அப்போது தவெகவினர் ஓட்டுக் கேட்க இங்கே வரக் கூடாது” என நேரடியாகவே கூறியதாகவும், அந்த உணர்வு தொகுதியில் நிலவுவது தங்களுக்கு விடப்பட்டுள்ள ஒரு அறைகூவல் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சொந்தக் கட்சியின் ஆட்சி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து நாஞ்சில் சம்பத் வெளிப்படையாகப் பேசியுள்ள இந்தக் கருத்துகள் தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கொளத்தூர் இடைத்தேர்தல் களத்தை இப்போதே சூடுபிடிக்க வைத்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in