LATEST NEWS
முதல்வர் விஜய் முன்பே இப்படியா…? மயானத்தில் வெடித்த மோதல்.. அமைச்சரை விரலை நீட்டி ஆவேசமாக எச்சரித்த வைகோவால் பரபரப்பு..!!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் இறுதிச்சடங்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் அமைச்சர் தமிழன் பார்த்திபனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய் செருப்பு அணியாமல் நடந்து சென்றும், உடலைத் தோளில் சுமந்தும் தனது அஞ்சலியைச் செலுத்தினார். திரு.வி.க. நகர் மயானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் மற்றும் வைகோ உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டதும், முதலமைச்சர் விஜய் இறுதி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, அருகிலிருந்த வைகோவும் உடலைத் தொட்டு வணங்க முன்னே சென்றார். அப்போது இடையில் கைகளை நீட்டிய அமைச்சர் தமிழன் பார்த்திபன், வைகோவைத் தடுத்து நிறுத்தியதாக வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது. கூட்டணியின் மூத்த தலைவரான தன்னை இவ்வாறு தடுத்ததால் கடும் அதிருப்தியடைந்த வைகோ, அமைச்சரைத் திரும்பி முறைத்துத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, நிலைமையைச் சமாளிக்க அமைச்சர் தமிழன் பார்த்திபன் வைகோவின் தோளில் கை வைத்துச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த வைகோ, விரலை நீட்டி அமைச்சரைக் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த அமைச்சர் மரிய வில்சன் மற்றும் முதலமைச்சரின் பாதுகாவலர் மூசா ஆகியோர் தலையிட்டு அமைச்சரை எச்சரித்துச் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி, அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தைத் தூண்டியுள்ளன. மூத்த கூட்டணிக் கட்சித் தலைவரிடம் அமைச்சர் நடந்து கொண்ட விதத்திற்கு ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மயானத்தில் நிலவிய கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவ்வாறு நடந்திருக்கலாம் என மற்றொரு தரப்பினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
