LATEST NEWS
“அன்று 9 வயது என்பதால் அவனைக் கொல்ல முடியவில்லை..” சிறுமியின் வீரச் செயலுக்கு 17 ஆண்டுகள் கழித்து தேடி வந்த பரிசு.. நெகிழ்ச்சி சம்பவம்..!!
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில், 9 வயது சிறுமியான தேவிகா ரோட்டவானின் காலில் குண்டு பாய்ந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்ட அவர், அடுத்த ஆண்டே நீதிமன்றத்தில் துணிச்சலாக ஆஜராகி, உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பை அடையாளம் காட்டினார். “அப்போது எனக்கு 9 வயதுதான் என்பதால் அவனைக் கொல்ல முடியவில்லை. நீதிமன்றத்தில் அடையாளம் காட்டுவதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை” எனக் கூறிய தேவிகாவின் சாட்சியமே, 2012-ஆம் ஆண்டு கசாப்பிற்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆனால், நாட்டிற்காகத் துணிச்சலாகச் சாட்சியளித்த தேவிகாவின் குடும்பத்திற்கு அதன் பிறகு வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. உறவினர்களின் ஒதுக்கத்திற்கு மத்தியில், உலர் பழங்கள் விற்றுப் பிழைப்பு நடத்திய தந்தையுடன் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு வாடகைக் குடிசையில் வாடகை கொடுக்க முடியாமல் வெளியேற்றப்படும் அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வந்தனர்; இன்றும் குளிர்காலங்களில் தேவிகாவின் காலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது. அரசு வாக்குறுதியளித்த வீடு கிடைக்காததால் மும்பை உயர்நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு தற்போது அந்தேரி மேற்குப் பகுதியில் ஒரு அறை கொண்ட வீட்டை ஒதுக்கியுள்ளது; இதன் மூலம் “17 ஆண்டுகால வலிகளுக்குப் பிறகு இப்போதுதான் புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” என தேவிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
