CRIME
“சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..” மாமூல் கேட்டு லாரியை மறித்த நபருக்கு ஓட்டுநர் கொடுத்த மரண பயம்.. முன்பக்க கண்ணாடியில் தொங்கியபடியே 100 கி.மீ தூரம் ஓட்டிச் சென்ற திக் திக் வீடியோ..!
நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து மாமூல் கேட்டு மிரட்டிய நபரை, ஓட்டுநர் ஒருவர் லாரியின் முன்பக்க கண்ணாடியில் தொங்கியபடியே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் சரக்கு லாரியை ஓட்டிச் சென்றபோது, நடுவழியில் லாரியை மறித்த நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், பணம் கொடுக்க மறுத்து லாரியை வேகமாக அங்கிருந்து எடுக்க முயன்றுள்ளார்.
லாரி நகரத் தொடங்கியதும், அந்த நபர் லாரியின் ஜன்னல் கதவைப் பிடித்தபடி ஏறி முன்பக்க கண்ணாடியின் அருகே தொங்கிக்கொண்டார். ஆனால், அந்த நபர் வெளியே தொங்குவதைப் பொருட்படுத்தாத ஓட்டுநர், வண்டியை நிறுத்தி அவரைக் கீழே இறக்கிவிடாமல் நெடுஞ்சாலையில் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இவ்வாறு ஓடும் லாரியின் வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டே அந்த நபர் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இருவரும் கம்பு மற்றும் அரிவாளைக் கொண்டு ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்டே பயணித்ததும் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா சண்டைக் காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்தப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
