CRIME
“என் வீட்டில் ஆயுதக் குவியல் இருக்கு…” இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அரிவாளுடன் கெத்து காட்டிய 19 வயது இளைஞருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. அதிர்ச்சி பின்னணி..!!
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் அரிவாள்களைக் காட்டி மிரட்டும் வகையில் பதிவிட்ட 19 வயது இளைஞரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெருங்களத்தூர் ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்த ஆதித்யா என்ற இளைஞர், நீளமான அரிவாள்களைக் கையில் வைத்துக்கொண்டு, தனது வீட்டில் ஆயுதக் குவியல் இருப்பதாகக் கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து பீர்க்கன்காரணை காவல் நிலைய ஆய்வாளருக்குத் தகவல் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அந்த வீடியோக்களை ஆய்வு செய்த பீர்க்கன்காரணை போலீசார், வீடியோவில் இருந்த நபர் ஆதித்யா என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, பெருங்களத்தூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 பயங்கர அரிவாள்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் தன்னை ஒரு பெரிய ‘ரவுடி’ போலக் காட்டிக்கொள்வதற்காகப் பல்வேறு இடங்களிலிருந்து இந்த ஆயுதங்களை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாக ஆதித்யா வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஆதித்யா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவருக்கு இந்த ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பதும், சமூக வலைதள ரீல்ஸ் மோகத்திற்காக மட்டும் வைத்திருந்தாரா அல்லது ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தாரா என்பதும் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
