LATEST NEWS
பெற்றோர்களே உஷார்..! இதைச் செய்யத் தவறினால் பள்ளி, கல்லூரி சேர்க்கையில் சிக்கல்.. குழந்தைகளின் ஆதார் அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!
5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு சேவை செப்டம்பர் 30, 2027 வரை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குப் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்களுடன் பால் ஆதார் வழங்கப்படும் நிலையில், வளர்ச்சிக்கு ஏற்ப கைரேகைகள் மற்றும் கருவிழிப் படலம் மாறுவதால், குழந்தைகள் 5 வயதை எட்டும்போதும் 15 வயதை எட்டும்போதும் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை ஆன்லைனில் செய்ய முடியாது; குழந்தைகளை நேரடியாக அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே குழந்தையின் தற்போதைய புகைப்படம், பத்து விரல்களின் கைரேகைகள் மற்றும் இரு கண்களின் கருவிழிப் பதிவு ஆகியவை புதிதாகப் பதிவு செய்யப்படும், ஆனால் ஏற்கனவே உள்ள ஆதார் எண்ணில் எந்த மாற்றமும் இருக்காது.
பள்ளிச் சேர்க்கை, நுழைவுத் தேர்வுப் பதிவுகள், கல்வி உதவித்தொகை மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றில் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க, 5 மற்றும் 15 வயதை நிறைவு செய்த குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களைப் பெற்றோர் உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதுப்பிப்பு முடிந்ததும் வழங்கப்படும் ஒப்புதல் சீட்டில் உள்ள எண்ணைக் கொண்டு ஆன்லைனில் புதுப்பிப்பு நிலையைத் தெரிந்துகொண்டு புதிய இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
